சென்னை:துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அஜித்குமாரின் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்குமாரின் கார் பந்தய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிப்பிற்கிடையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வந்த அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் தமது தலைமையில் ஓர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கினார். இந்த அணி துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று தற்போது மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இது குறித்த செய்திகள், வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் தனது வாழ்த்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”என் அன்பான அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதித்துள்ளீர்கள். இறைவனின் ஆசிர்வாதமும் எனது நேசங்களும்” என வாழ்த்தை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
நேற்று கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "அஜித்குமார் அணியினர் முதல் பந்தயத்திலேயே அசாதாரணமாக சாதனை படைத்துள்ளனர். தனது எல்லைகளைத் தாண்டி பன்முகத்தன்மை கொண்ட ஆர்வங்களை நோக்கி செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய (motorsports) விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க தருணம்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.