தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”ஆறிலிருந்து அறுபதுவரை ரசிகர்களை கொண்டவர்”... ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Rajinikanth 74th birthday: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து (Credits - mkstalin 'X' Account)

By ETV Bharat Entertainment Team

Published : 6 hours ago

Updated : 5 hours ago

சென்னை: தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு தங்களது சமூக வலைதள பக்கம் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்களது 'X' வலைதளப்பக்கங்களில் தங்களது வாழ்த்து செய்திகளை பதிவிட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூப்பர்ஸ்டாட் ரஜினிகாந்துக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இதையும் படிங்க:மதுரையில் ரஜினிக்கு கோயில்.. 300 கிலோவில் சிலையை பிரதிஷ்டை செய்த தீவிர ரசிகர்..!

திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது ஜெய்ப்பூரில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.

அண்ணாமலை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Last Updated : 5 hours ago

ABOUT THE AUTHOR

...view details