மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகர் சைஃப் அலி கான் (Saif Ali Khan) வியாக்கிழமை (ஜன.16) அதிகாலை அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டார். மும்பை பந்த்ரா பகுதியில் வசிக்கும் நடிகர் சைஃப் அலி கானின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் அடையாளம் தெரியாத நபர் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சித்தது மட்டுமின்றி, சைஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்தினார். இச்சம்பவம் ஹிந்தி திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இக்கொள்ளை முயற்சியின்போது வீட்டு பணியாளர்களின் கூச்சலைக் கேட்டு அங்கு வந்த சைஃப் அலி கான் அந்த அடையாளர் தெரியாத நபரை தடுக்க முயன்றார். அந்த முயற்சியில் அந்த நபர் சைஃப் அலி கானை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அதில் சைஃப் அலி கான் பலத்த காயமடைந்தார். பணியாளர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.சைஃப் அலி கானை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால்தான் அவர் ஆபத்திலிருந்து மீண்டுள்ளார் என கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அதிகாலையில் சைஃப் அலி கானின் கார் உடனடியாக தயாராகவில்லை, காருக்காக காத்திருக்காமல் உடனடியாக ஆட்டோவில் சென்றதே சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு சென்றதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், சைஃப் அலி கானை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ரானா (Bhajan Singh Rana) அச்சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசி உள்ளார்.
அவர் கூறுகையில்,""பாந்த்ராவில் உள்ள சத்குரு தர்ஷன் கட்டிடத்தின் வழியாக நான் சென்று கொண்ருந்த போது, ஒரு பெண் மற்றும் சிலர் ஆட்டோவை நிறுத்தும்படி என்னைத் தடுத்து நிறுத்தினர். நான் ஏதோ அடிக்கடி நடக்கும் சண்டை என நினைத்தேன். அப்போது கழுத்திலும் முதுகிலும் பலத்த காயங்களுடன் ஒருவர் ஆட்டோவில் ஏறினார்.
அவரது வெள்ளை குர்தா முழுவதும் ரத்தத்தில் நனைந்திருந்தது. அதனால் அவர் யாரென சரியாக கவனிக்கவில்லை. அவர் ஆட்டோவில் உட்கார்ந்து உடனே என்னிடம், மருத்துவமனைக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்றுதான் கேட்டார். நான் 8-10 நிமிஷத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று விடுவோம் என கூறினேன். முதலில் நான் பாந்த்ராவில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டேன்.
இதையும் படிங்க:அஜித்தின் ’விடாமுயற்சி’ வருகையால் தனுஷின் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ரிலீஸ் தேதி மாற்றம்
ஆனால் அவர் அதற்கு பதிலாக லீலாவதி மருத்துவமனைக்கு வழி சொல்லி போக சொன்னார். அதிகாலை 3 மணிக்கெல்லாம் மருத்துவமனையை அடைந்துவிட்டோம்" என்றார் ஆட்டோ ஓட்டுநர் ரானா. "நாங்கள் மருத்துவமனையை அடைந்ததும், அவர் வாசலில் இருந்த காவலாளியை அழைத்து,'தயவுசெய்து ஒரு ஸ்ட்ரெச்சரை கொண்டு வாருங்கள். நான் சைஃப் அலி கான் என்று கூறினார். அப்போதுதான் அவர் நடிகர் சைஃப் அலி கான் என அடையாளம் தெரிந்தது” என்றார் ஆட்டோ ஓட்டுநர் ரானா.
மேலும் அவசரமான சூழ்நிலையில் சவாரி மேற்கொண்டதால் அவரிடம் தான் எந்த கட்டணத்தையும் வாங்கவில்லை எனவும் ரான தெரிவித்தார். சைஃப் அலி கான் ஆட்டோவில் சவாரி செய்த போது பையனுடன் பேசிக் கொண்டிருந்தார். மேலும் மற்றொரு இளைஞன் ஒருவர் இருந்தார் என்றும் ஆட்டோ ஓட்டுநர் ரானா கூறினார். அது அவரது மூத்த மகன் இப்ராஹிம் அலி கானாக இருக்கலாம் என கூறப்படுகிறது.