சென்னை :இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (செப் 20) நடைபெறுகிறது. தற்போது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராணா, "இந்த படத்தில் நான் நடித்ததற்கு என்னுடைய அதிர்ஷ்டம் தான் காரணம். இந்த படத்தில் நான் ரஜினியுடன் இணைந்து நடித்ததன் மூலம் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அதை பற்றி பேச 2 மணி நேரம் தேவைப்படும்" என்றார்.
இதையும் படிங்க :"ரஜினி வழி தனி வழி..கமல் வழி தனி வழி.." - வேட்டையன் ஆடியோ லாஞ்சில் அபிராமி பஞ்ச்! - vettaiyan audio launch
பின்னர் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது, "இது ஒரு சிறந்த தருணம். தலைவர் ஆடியோ லாஞ்ச் என்றால் ஸ்பெசல் தான். தலைவர் கூட்டணியில் இதுவரை நான் பணியாற்றிய படங்களில் இது வித்தியாசமான ஜானர் ஆகும். கூலி படம் வேற லெவல் சம்பவமாக இருக்கும்" என தெரிவித்தார்.
நடிகை ரித்திகா சிங் பேசுகையில், "வேட்டையன் திரைப்படத்தில் நானும் இணைந்து நடித்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். எனது முதல் படத்திலிருந்து இப்படி ஒரு வாய்ப்புக்காக தான் காத்திருந்தேன். என்னுடைய கதாபாத்திரம் குறித்து நிறைய பேச விரும்பவில்லை.
படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்த தலைமுறையினர் அதிகமாக செல்போனில் தங்களது நேரங்களை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ரஜினி படப்பிடிப்பின் போது தனியாக அமைதியாக அமர்ந்து தனது நேரத்தை செலவழிக்கிறார். அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.