சென்னை: ’புஷ்பா 2’ திரைப்படம் இதுவரை இந்திய அளவில் 600 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ’புஷ்பா 2’. புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.
'பாகுபலி' திரைப்படத்திற்கு பிறகு 'புஷ்பா' திரைப்படம் தெலுங்கு சினிமாவிற்கு முக்கியமான படமாக அமைந்தது. தென்னிந்தியாவை விட புஷ்பா முதல் பாகத்திற்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியை விட புஷ்பா 2 திரைப்படம் ஹிந்தி மொழியில் அதிக வசூலை பெற்று வருகிறது. புஷ்பா 2 வெளியான 6 நாட்களில் பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய அலவில் 648.27 கோடி வசூல் செய்துள்ளது.
உலக அளவில் இன்று புஷ்பா 2 திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கபடுகிறது. இதுவரை வெளியான 6 நாட்களில் தெலுங்கு மொழியில் 222.6 கோடி வசூலும், ஹிந்தியில் 370.1 கோடி வசூலும் தமிழில் 37.10 கோடி வசூலும் மலையாளத்தில் 11.7 கோடி வசூலும், கர்நாடகாவில் 4.45 கோடி வசூலும் பெற்றுள்ளது. நேற்று வார நாளான செவ்வாயன்று, சென்னையில் 141 காட்சிகள் திரையிடப்பட்டு அதில் 20 சதவிதம் பேர் புஷ்பா 2 படத்தை பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க:'புஷ்பா 2' டிரெய்லர் ரிலீசுக்கு வந்த கூட்டம் எல்லாம் ஒரு விஷயமா? ... சித்தார்த் பேச்சால் சர்ச்சை!
வட இந்தியாவில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 253 காட்சிகளில் 49.50 சதவீதம் பேர் படம் பார்த்துள்ளனர். இன்று புஷ்பா 2 திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் RRR, கல்கி 2898AD ஆகிய படங்களின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. RRR திரைப்படம் உலக அளவில் மொத்தமாக 1250 கோடி வசூல் செய்த நிலையில், கல்கி 2898AD திரைப்படம் மொத்தமாக 1042.25 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.