சென்னை: நடிகர் சூர்யா 45வது திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சூர்யா 45’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பம் முதல் கோவையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
20 வயதான இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த ஆண்டு மிகவும் பிரபலமடைந்த 'ஆசை கூட', 'கட்சி சேர' உள்ளிட்ட ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'பென்ஸ்' திரைப்படத்திற்கும் இசையமைப்பத்து வருகிறார். இதனைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா சூர்யா 45 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.
20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா, த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்திரன்ஸ், யோகி பாபு, சுவாசிகா, நட்டி, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, அனகா ஆகியோர் நடிக்கின்றனர். ’லப்பர் பந்து’ திரைப்படம் மூலம் பிரபலமான சுவாசிகா இப்படத்தில் கதாநாயகிக்கு இணையான கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.