சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஷால். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள 'ரத்னம்' இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "அரசியலை ஒரு துறையாக நினைத்து இதில் சம்பாதிக்கலாம் என்று வந்தால் சறுக்கல் தான்.
ஒரு விஷயத்தைச் சாதிக்க வேண்டும் என்றால் நிறைய விஷயங்கள் இழக்க வேண்டும். இனி புதிதாக வரும் அரசியல் வாதிகளுக்குப் பொறுமை மிக முக்கியம். நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று ஏன் வெளிப்படையாகச் சொல்கிறேன் என்றால், நான் எப்போதும் எதையும் மூடி மறைத்தது இல்லை.
கட்சி என்பது இருக்கும், எந்த கட்சி என்று வருங்காலத்தில் சொல்கிறேன். விஜயகாந்த் போல என்னிடம் திருமண மண்டபம் இல்லை. இருந்திருந்தால் அதையும் இடித்து தள்ளியிருப்பார்கள். 2026 வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் நிச்சயம் இருக்கும். முதலில் நான் தனியாக வந்து என்னை நிரூபிக்க வேண்டும் அதன்பிறகு கூட்டணி பற்றிப் பார்க்கலாம்" எனக் கூறினார்.