சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அவரது 68வது திரைப்படம் 'கோட்' (Greatest of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மூன்று பாடல்கள் விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் இதுவரை வெளியாகியுள்ளது.
மேலும் விஜய் பிறந்தநாளுக்கு ஷ்பெஷல் ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கோட் படத்தின் 3வது சிங்கிள் ஸ்பார்க் பாடல் வெளியானது. இப்பாடல் ஒருபக்கம் வரவேற்பைப் பெற்று வந்தாலும் மறுபக்கம் நெட்டிசன்கள் பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என எதிர்மறையான விமர்சனக்களை தெரிவித்து வருகின்றனர். கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அதில் ஒரு கதாபாத்திரம் De - ageing தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ஸ்பார்க் பாடல் லிரிக்கல் வீடியோவில் இளம் வயது விஜய் தோன்றுகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், படக்குழுவை வறுத்தெடுத்து வருகின்றனர். விஜய் ஏற்கனவே இளமையாக இருக்கிறார், அவரை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என கூறி வருகின்றனர். மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அதற்குள் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை சரி செய்ய வேண்டும் என இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.