சென்னை: பிரபல நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்.30ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் வயிற்று வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து அப்போலொ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இதயத்தில் (aorta) இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாத (transcatheter) stent முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து அவரது மனைவியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல நடிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில் உடல் நலம் தேறிய நடிகர் ரஜினிகாந்த் இன்று (அக்.04) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.