சென்னை:ஜே 4 ஸ்டுடியோஸ் - ராஜ ரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் சின்னத்திரை நடிகர் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் ஜூ கீப்பர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாக படக்குழு அறிவித்தனர்.
நடிகர் சூரி பேச்சு:இந்த நிலையில், சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று (பிப்.7) நடைபெற்ற மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் சூரி, புகழ், முத்துக்காளை, நடிகை ஷெரீன், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, “காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். நானும் 3 வருடம் அதை அனுபவித்து இருக்கிறேன். காடும், காட்டு உயிரினமும்தான் இயற்கைக்கு பக்கத்தில் இருக்கிறது.
ஊருக்குள் யானை, கரடி, சிங்கம், புலி எல்லாம் புகுந்ததாக சொல்கிறோம். ஆனால், அவைகள் அங்குதான் இருக்கிறது. நாம் தான் உள்ளே புகுந்துட்டோம் என்று நினைக்கிறேன். இது எல்லோருக்கும் சேர வேண்டிய கருத்து. எல்லோரும் பார்க்க வேண்டிய படம். மக்கள் மத்தியில் எப்போதும் யுவன் சங்கர் ராஜா இருந்து கொண்டு இருக்கிறார். புகழ் சினிமாவில் இன்னும் உச்சத்தில் வருவார். சினிமாவில் ஜெயித்த நிறைய பேர் கஷ்டப்பட்டுதான் வந்திருக்கிறார்கள்.
நானும் அதே மாதிரிதான் வந்துருக்கேன். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லார் குடும்பத்திலும் அவர் பேர் இருக்கிறது. புலியை எப்படி சமாளித்த என்று கேட்டதற்கு, சிங்கம் புலியை சமாளிச்சுட்டேன், இந்த புலியை சமாளிக்க மாட்டேனா? என்று கூறினார். ஜெயிப்பது முக்கியம். அதில் நிலைப்பதும் முக்கியம். படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், அதை தியேட்டருக்கு கொண்டு வருவது கஷ்டமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.