சென்னை: 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி - அரவிந்த் சாமி நடித்துள்ள படம் மெய்யழகன். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (செப்.14) சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, இயக்குநர் பிரேம்குமார், நடிகை ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இப்படத்தில் இருந்து ஏறுகோள் காணிக்கை என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
மேடையில் பேசிய நடிகர் கார்த்தி, "96 படத்தை முடித்துவிட்டு ஆறு வருடம் இந்த படத்திற்காக பிரேம்குமார் காத்திருக்கிறார். பிரேம்குமார் எனக்காக ஒரு கதை எழுதிவிட்டு என்னிடம் பேச தயங்கிக் கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டதும், நானே அவரை அழைத்து பேசுவோமா என கேட்டேன். என்னைப் பார்க்க வந்தவர், ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து படிக்கச் சொன்னார். அதை படிக்க படிக்க அழுதுவிட்டேன்.