சென்னை: தமிழ் சினிமாவில் புத்தம் புது முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், ''டீன்ஸ்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 13 இளம் வயதினரை மையமாகக் கொண்டு சாகசம் நிறைந்த த்ரில்லர் கதையாக 'டீன்ஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. பயாஸ்கோப் டிரீம்ஸ் எல்.எல்.பி மற்றும் அகிரா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டீன்ஸ் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு முதல் பார்த்திபன் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார். டீன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்சார் சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் என்ற சாதனை படைத்தது.
இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இசை வெளியீட்டு விழாவின்போது, டீன்ஸ் திரைப்படம் மேலும் ஒரு உலக சாதனையை படைத்தது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் படத்தின் இசை 4 காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்று உலக சாதனை சங்கத்தால் அங்கீகாரம் பெற்றது. இதனைதொடர்ந்து டீன்ஸ் திரைப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களால் இயக்குநர் பார்த்திபன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.