சென்னை: துணைவேந்தர் நியமனம் செய்வதில் அரசு மற்றும் ஆளுநர் இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட விதிகளினால், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனிடையே, துணைவேந்தர் நியமனம் குறித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களில் பட்டங்களை வழங்க பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி அனுமதி வழங்க வேண்டுமென உயர் கல்வித்துறை கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்திருந்தது. இதில் சுமார் 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் சுமார் 13 மாதமாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களின் பட்டப் படிப்பு சான்றிதழில் துணைவேந்தரின் கையொப்பம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது சென்னை பல்கலைக்கழகத்தின் விதியாக இருக்கிறது.