புதுடெல்லி: ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவிருந்த UGC-NET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அறிவித்துள்ளது.
உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் மற்றும் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்புக்கான தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2024 ஆண்டுக்கான UGC -NET தகுதித் தேர்வு ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை கருத்தில் கொண்டு ஜனவரி 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிகை நாட்களில் யுசிஜி-நெட் தேர்வு நடத்த வேண்டாம்-மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை!
இதையடுத்து, முன்பு அறிவித்ததேர்வு அட்டவணைப்படி, ஜனவரி 15 ஆம் நாள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்படும் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் NTA தெரிவித்துள்ளது.
ஆனால் அட்டவணையில், ஜனவரி 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்வில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், முன்பு திட்டமிட்டப்படியே இத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல, ஜனவரி 15 இல், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்கள், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UGC-NET தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.