சென்னை: டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்து முறைகேடு செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, இனிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமை அடிப்படையில் தேர்வு பெறுபவருக்குத் தற்காலிக நியமன ஆணை மட்டுமே வழங்கப்படும் எனவும், அவர்களின் தமிழ்வழி முன்னுரிமைச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே பணி வரன்முறை செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு முயற்சிக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை சமர்ப்பித்தால், அதன் அடிப்படையில் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் தமிழ் வழியில் படித்ததாகவும், அதற்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பலர் போலியாக சான்றிதழ்களை சமர்ப்பித்து வேலை வாய்ப்புகளை பெறுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து, மதுரையைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். 2019ல் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பலர் முறைகேடாக சான்றிதழ்களை சமர்ப்பித்து வேலை வாய்ப்புகளைப் பெற்றதும் அதில் தெரிவிக்கப்பட்டது.