சென்னை:தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மொத்தம் 492 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மீன்வள தொழில்நுட்பம், மெரைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசுக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 19 ஆயிரம் இடங்களில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு, நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதிநேரப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொழில்நுட்பக்கல்வி ஆணையர் வீரராகவராவ் கூறும்போது, “2023-24 ஆம் கல்வியாண்டில் 3 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் பட்டப்படிப்பினை 82,530 மாணவர்கள் முடித்துள்ளனர். இவர்களில் 75 சதவீதம் பேர் அதாவது 52 ஆயிரத்து 888 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றதன் மூலம் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களில் ரூ.15 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் பணி வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேலும் மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.