சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 6) நிறைவடைகிறது.
அதாவது, இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொதுகலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. அதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு விண்ணப்பம் கடந்த மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து துவங்கியது.
அதன்படி, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக நேற்று (ஜூன் 5) மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 42 ஆயிரத்து 983 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1 லட்சத்து 96 ஆயிரத்து 570 மாணவர்கள் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 69 ஆயிரத்து 68 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்க கடைசி தேதியாக இன்று (ஜூன் 6) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி வழங்கப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
பொறியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், இணைய வசதி இல்லாதவா்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் எனவும் வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு, மேலும் விவரங்களுக்கு 01800-425-0110 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு; எப்படி விண்ணப்பிப்பது?