சென்னை: நடப்பு (2024 – 2025) கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ பட்டப்படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்வதற்கு, இன்று (ஆக.4) முதல் 27ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், விதிமுறைகள் குறித்தும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைத்தள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால், கொரியர் சேவை மூலமாகவோ அல்லது நேரிலோ ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 5.30 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்களைச் செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106. முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.