டெல்லி:வினாத் தாள் முறைகேடு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் மற்றும் யுஜிசி நெட் ஜூன் மாத தேர்வு, என்சிஇடி 2024 எனப்படும் தேசிய பொது நுழைவுத்தேர்வு மற்றும் அனைத்து இந்திய ஆயுஷ் முதுநிலை நுழைவுத் தேர்வுகளுக்கான மறுதேர்வு மற்றும் புதிய தேர்வுகளுக்கான தேதிய தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவ அமைப்பினர், பெற்றோர், பொது மக்கள், எதிர்க்கட்சிகள் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் உதவிப் பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான தகுதியைத் தீர்மானிக்கும் நெட் தேர்வு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. ஏறத்தாழ 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதிய நிலையில், இந்தத் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தேசிய சைபர் கிரைம் அளித்த புகாரைத் தொடர்ந்து, நெட் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது.
அதுட்டுமின்றி நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத்குமார் சிங்கை பதவியில் இருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய மத்திய கல்வி அமைச்சகம் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த பிரதீப் சிங் கரோலா, தேசிய தேர்வு முகமையின் தலைவராக நியமித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் , மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவியல் உதவிப்பேராசியர் பணிக்கான ஒருங்கிணைந்த சிஐஎஸ்ஆர் யுஜிசி நெட் தேர்வு ஜூலை முதல் ஜூலை 27 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேசிய பொது நுழைவுத் தேர்வான் என்சிஇடி ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வுக்கான மறு தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஓஎம்ஆர் தாளில் தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த முறை கணினி வழியில் தேர்வு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து இந்திய ஆயுஷ் முதுநிலை நுழைவுத் தேர்வு 2024 ஜூன் 6ஆம் தேதி முன்னர் திட்டமிடப்பட்ட நிலையில், அதன் புதுப்பிக்கப்பட்ட தேர்வு தேதி அல்லது அதற்கான அப்டேட் குறித்து மாணவர்கள் காத்திருக்குமாறு தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
இதையும் படிங்க:நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்..! - rahul gandhi on neet