தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற்றது! - National Medical Commission - NATIONAL MEDICAL COMMISSION

National Medical Commission: கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்பிய தற்காலிக இடங்களுக்கான ஒதுக்கீடுகள் மீண்டும் தரவரிசை அடிப்படையில் நாளை இறுதியாக வெளியிடப்பட உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம்
தேசிய மருத்துவ ஆணையம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 9:45 PM IST

சென்னை:கன்னியாகுமரியில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற்றுள்ளதால், எம்பிபிஎஸ் படிப்பில் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்த 100 இடங்கள் பறிபோயுள்ளது.

இதனால், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, ஏற்கனவே கல்லூரியில் சேர்வதற்கு விரும்பிய இடங்களை பதிவு செய்த மாணவர்களுக்கு மீண்டும் தரவரிசை அடிப்படையில் புதிதாக இடங்களை ஒதுக்கீடு செய்து இறுதி பட்டியலை வெளியிட உள்ளது. மேலும், கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த ஐந்து மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்ப்பதற்கும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7 ஆயிரத்து 628 பேருக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 1,806 பேருக்கும் தற்காலிகமாக நேற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம், கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ப்பதற்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெறுவதாக இன்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திற்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்பிய தற்காலிக இடங்களுக்கான ஒதுக்கீடுகள் மீண்டும் தரவரிசை அடிப்படையில் நாளை இறுதியாக வெளியிடப்பட உள்ளது.

மேலும், சிறப்பு பிரிவான விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்குப் பின்னர், தற்பொழுது உள்ள காலியிடங்கள் விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 971 இடங்கள், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 30 இடங்கள், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 91 இடங்கள் என 3 ஆயிரத்து 992 இடங்கள் மற்றும் 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 302 இடங்கள், 3 தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 433 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதேபோல், பிடிஎஸ் படிப்பில் சென்னை, புதுக்கோட்டை, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 195 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 1790 இடங்களும் காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக தரவரிசை ஒன்று முதல் 28 ஆயிரத்து 819 வரையில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,417 வரையில் பெற்றவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை 27ஆம் தேதி வரை பதிவு செய்யதனர். அவர்களுக்கு இன்று இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்படுகிறது என மருத்துவக் கல்வி மற்றும ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்தது.

மேலும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை பெற்றவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். இந்த நிலையில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான இறுதி ஒதுக்கீடு நாளை வழங்கப்பட உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:எம்பிபிஎஸ் - பிடிஎஸ் முதல் சுற்று இடம் ஒதுக்கீடு; மாணவர்களுக்கான கால அவகாசம் எப்போது முடியும்? - Medical Seat Allotment

ABOUT THE AUTHOR

...view details