சென்னை:சென்னை ஐஐடியின் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், மனிதனை மையப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு மையத்தை (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) இன்று தொடங்கியுள்ளது. இதில் தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் சங்கர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மையத்தை திறந்து வைத்தனர்.
இது குறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் மனித ஆற்றலைப் பெருக்கும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை கொண்டது. இந்த மையம் 5.0ன் பரந்த கொள்கைகளுடன் தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் நோக்குடன் செயல்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, “இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும். ஐஐடி-எம் பிரவர்த்தக், உச்சநீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம் (சன்சத் டிவி வழியாக), இந்திய ராணுவம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் திட்டப் பணிகளுக்கு பாதுகாப்பு தரும் அம்சமாக இந்த மையம் அமையும்” என்றார்.
இதையும் படிங்க:பிறந்தநாள் ஸ்பெஷல்.. 50 லட்சம் கைரேகைகள் கொண்டு வரையப்பட்ட உதயநிதி ஸ்டாலின் படம்!