தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

AEBAS முறையால் மருத்துவர்களின் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.. தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார்

AEBAS system issue: மருத்துவர்களுக்கு ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த பாதுகாப்புக் குறைபாட்டை எதிர்கொள்ள நேரிடுவதால், தேசிய மருத்துவக் கவுன்சிலிடம் இதனை எடுத்துக் கூற தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் முன் வர வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Govt doctors association ex president said AEBAS system will affected doctors Personal safety
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 5:49 PM IST

Updated : Feb 4, 2024, 2:24 PM IST

தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார் பேட்டி

மதுரை:தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் AEBAS எனப்படும் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என காரண விளக்க அறிவிக்கையை (Show Cause Notice) அனுப்பியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ஆகியவை பாதிப்பிற்கு ஆளாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் செந்தில்குமார், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அவரது நேர்காணல் பின்வருமாறு,

ஆதாருடன் கூடிய பயோ மெட்ரிக்:தேசிய மருத்துவ கவுன்சில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான காரண விளக்க அறிவிக்கையை தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது. தேசிய மருத்துவக் கவுன்சில் கொடுத்துள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் விடுமுறைகள் மற்றும் வருகையை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பது நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது. இது குறித்த எங்களது விளக்கங்களையும் தமிழக அரசிடம் நாங்கள் அளித்துள்ளோம்.

காலிப்பணியிடங்கள்:சாதாரண விடுப்பு (Casual Leave), ஈட்டிய விடுப்பு (Earn Leave) மற்றும் போஸ்ட் டூட்டி ஆஃப் (Post Duty Off) போன்றவற்றை மருத்துவர்கள் எடுத்துக் கொள்ள முடியாது என்ற வகையில், தேசிய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது. இது ஒருபுறமிருந்தால், தமிழக அரசு மருத்துவத் துறையில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தேசிய மருத்துவக் கவுன்சிலின் நடைமுறை சாத்தியமற்ற விதிமுறைகளை அமல்படுத்த முடியாது. பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தேசிய மருத்துவக் கவுன்சில் ஆய்வு:இதனை ஆக்கப்பூர்வமான முறையில் அணுகுவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் குழு ஒன்றை அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் போன்ற அமைப்புகளைக் கலந்தாலோசனை செய்து, போர்க்கால அடிப்படையில் இயங்க முன் வர வேண்டும். ஏனென்றால், அடுத்த ஆறு மாதத்திற்குள் தேசிய மருத்துவக் கவுன்சில் ஆய்வுகள் மேற்கொள்ள இருக்கிறார்கள். புதிய மருத்துவக் கல்லூரிகள் 11 தவிர, பழைய மருத்துவக் கல்லூரிகளுக்கும் புதிய விதிமுறைகளின்படி ஆய்வு மேற்கொள்ளக்கூடும்.

இந்நேரத்தில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில் ஆய்வு மேற்கொண்டால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். இதனை முறையான வகையில் அணுகி தீர்வு காண, மருத்துவக் கல்வி இயக்குநரகம் முன்வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

போர்க்கால வேகம் வேண்டும்:தமிழகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட ஏறக்குறைய 3 ஆயிரத்து 500 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் மருத்துவப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மட்டுமே 800-இல் இருந்து 900 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன.

தற்போது உத்தரவுகள் பிறப்பித்தாலும்கூட, இன்னமும் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை. மருத்துவக் கல்வி இயக்குநரக அளவிலேயே 1,000-லிருந்து 1,500 பணியிடங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் நிரப்பாமல் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவை மேற்கொள்வது சாத்தியமில்லை. கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

10 விழுக்காடு பற்றாக்குறை:அங்கீகார ரத்து நடவடிக்கைகளின் மூலமாக ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்பது மிக முக்கியம். பொதுவாக ஒரு கல்வி நிறுவனத்தில் 10 விழுக்காடு மட்டுமே பணியிடப் பற்றாக்குறை அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழே 10 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ளன.

இதில் 1,000-லிருந்து 1,500 என்பது 10லிருந்து 14 விழுக்காடு பற்றாக்குறை உள்ளது. இந்நிலை பரவலாகத் தொடருமானால், அனைத்து கல்லூரிகளும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். இதில் சீரற்றத் தன்மை நீடிக்குமானால், பாதி கல்லூரிகள் பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம். இதனைக் குறைக்க வேண்டுமானால், குறைந்தது 800 பணியிடங்களாவது உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

சாதாரண பயோ மெட்ரிக்:மூன்று மாதங்களுக்கு முன்னால், தேசிய மருத்துவக் கவுன்சில் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையின்படி, ஒரே நேரத்தில் அனைத்து மருத்துக் கல்லூரிகளிலும் ஆய்வு மேற்கொள்வர். இனி வருங்காலத்தில் தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு சிக்கல் ஏற்படும். இதனை ஆக்கப்பூர்வமான வகையில் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி, வெறும் பயோமெட்ரிக் வருகைப் பதிவில் எந்தவித சிக்கலுமில்லை. அதனை ஆதாருடன் இணைத்து வருகைப் பதிவை மேற்கொள்வதன் மூலம் தனிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளது. இதனை நீதிமன்றத்தின் வாயிலாக அணுக, தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் முடிவெடுத்துள்ளது. தனிநபர் மற்றும் நிதி சார்ந்த பாதுகாப்பு சிக்கல்கள் இதில் உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்:இதனைப் பொறுத்தவரை தேசிய மருத்துவக் கவுன்சில், சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமனம் செய்யாமலேயே மாதம் ஒருமுறை ஒருவரை அழைத்து வகுப்பெடுக்கும் நிலையைக் கண்டறிந்து மாற்றுவதற்காக, ஆதாருடன் கூடிய பயோ மெட்ரிக் வருகைப் பதிவை வலியுறுத்தி வருகிறது. ஆனால் மாறாக, தமிழக அரசைப் பொறுத்தவரை, காலிப் பணியிடங்களை நிரப்புவதும் இல்லை, பதவி உயர்வும் அளிப்பதில்லை. இதனைத் தடுப்பதற்காக தேசிய மருத்துவக் கவுன்சில் இந்த முறையைக் கொண்டு வர நினைக்கிறது.

மறுபரிசீலனை:ஒருவிதத்தில் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், மற்றொருபுறம் பாதுகாப்பு மற்றும் நிதி சார்ந்து தனிநபர் பாதிப்புகள் அதிகம் உள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் எந்தவித சிக்கலும் இல்லாத நிலையில், ஆதாருடன் கூடிய பயோ மெட்ரிக் அமைப்புதான் இங்கே கேள்விக்குள்ளாகிறது. ஆகையால், இதனை தேசிய மருத்துவக் கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

செயற்குழு நிபந்தனை:தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் கடந்த செயற்குழுவில் ஏப்ரல் 1, 2024 வரை மருத்துவம் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஆதாருடன் கூடிய பயோ மெட்ரிக் பதிவை மேற்கொண்டால், நாங்களும் ஆதரிப்போம். இல்லாவிடில், இந்த முறையை நிராகரிப்போம். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் மூலம் தேசிய மருத்துவக் கவுன்சிலை இணங்கச் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கை ரேகை, கருவிழி எல்லாம் பழசு, மூச்சுக்காற்று தான் இனி புதுசு: செல்போன் அன்லாக் செய்ய புதிய தொழில்நுட்பம்!

Last Updated : Feb 4, 2024, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details