சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 915 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டைப் போலவே, மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்த பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. தற்போது வரை மாணவர்கள் வணிகவியல் பாடப்பிரிவு (பி.காம்) மற்றும் கணினி அறிவியல் படிப்பிற்கு அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 - 25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில், மே 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இன்றே கடைசி நாள்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மே 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து 915 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மாணவர்கள் இன்று (மே 20) வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதிவு செய்த ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் மே 24ஆம் தேதி அனுப்பப்படுகிறது. அதனைத் தாெடர்ந்து, மே 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, பாதுகாப்புபடை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.