தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை.. எப்போது தொடக்கம்? - GOVT SCHOOL ADMISSION

2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (tnschools.gov.in website)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 7:19 AM IST

சென்னை:தமிழ்நாட்டில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கிட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல், அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அரசாணையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும்.

இதற்காக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் முன் பருவக் கல்வியை நிறைவு செய்யும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பம் தொடக்கம்; தேர்வு எப்போது?

அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து முதல் வகுப்போ அல்லது பிற வகுப்புகளிலோ அரசுப் பள்ளிகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற வைக்க வேண்டும்.

2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details