சென்னை: இந்தியாவின் முன்னணி மென்பொருகள் நிறுவனங்களில் ஒன்று 'ZOHO'. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலக அளவில் கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு. கடந்த 1996-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னை மட்டுமல்லாமல் ஆந்திராவின் ரேணிகுண்டாவிலும் இந்த நிறுவனத்திற்கு கிளை உள்ளது. கொரோனா பிரச்னைக்குப் பின்னர், தென் மாவட்டங்களிலும் கிளைகளை திறந்தது. மதுரை, தேனி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் அலுவலகங்களை திறந்து அப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.8000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.
இந்த நிலையில், 'ZOHO' நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
"இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது
AI-யின் சமீபத்திய முக்கிய முன்னேற்றங்கள் உட்பட, நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுப் பணியைத் தொடர்வதோடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் முழு நேரமும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று முடிவு செய்துள்ளேன்.
நான் 'ZOHO' கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியிலிருந்து விலகுகிறேன். தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்குப் பொறுப்பான தலைமை விஞ்ஞானியாக ஒரு புதிய பொறுப்பை ஏற்கவுள்ளேன். எங்கள் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் தாவே புதிய தலைமை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். எங்கள் இணை நிறுவனர் டோனி தாமஸ் அமெரிக்காவில் செயல்படும் 'ZOHO'-வை வழிநடத்துவார். ராஜேஷ் கணேசன் குழுமத்தின் மேலாண்மையை கவனிப்பார். மணி வேம்பு Zoho.com பிரிவை வழி நடத்துவார்.
நிறுவனத்தின் எதிர்காலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சவாலை நாம் எவ்வளவு சிறப்பாகச் சமாளிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. மேலும் எனது புதிய பணியில் ஆர்வத்துடனும், தீவிரமாகவும் செயல்படுவேன். தொழில்நுட்பப் பணிகளில் மீண்டும் கை கோர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.