தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2025: “ஜிஎஸ்டி வரி செலுத்த கூடுதல் கடன் பெறுகிறோம்” - என்ன எதிர்பார்க்கிறது தொழில்துறை? - UNION BUDGET 2025 EXPECTATIONS

ஜிஎஸ்டி வரி தங்களுக்கு அதிக நிதி பாரத்தை ஏற்படுத்துவதாக தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நிதிநிலை அறிக்கை 2025-இல் சிறு குறு தொழில்முனைவோரின் எதிர்பார்ப்புகள் - கோப்புப் படம்
நிதிநிலை அறிக்கை 2025-இல் சிறு குறு தொழில்முனைவோரின் எதிர்பார்ப்புகள் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 6:08 PM IST

கோயம்புத்தூர்: மத்திய பட்ஜெட் 2025-இல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என சிறு, குறு தொழில் முனைவோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி, நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2025 - 2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பல எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. தொழில், விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புகள் என பல நிலைகளில் உள்ள மக்கள் வரி அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் குறித்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர் (ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக சிறு, குறு தொழில்கள் (MSME) வளர்ச்சி அடையும் வகையில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என கோவை தொழில்முனைவோர்கள் வலியுறுத்தி உள்ளனர். பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கார்ப்பரேட் வரி 30 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது; அதில் சிறு, குறு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இருப்பதால் வரியை 20 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று கோவை தொழில் வர்த்தக கூட்டமைப்பான கொடிசியாவின் தலைவர் கார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார்.

இரண்டடுக்கு ஜிஎஸ்டி போதும்

பொதுவாக வங்கிகளில் பெரு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதே நேரம் சிறு குறு தொழில்களுக்கு அதிக வட்டி விதிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள கார்த்திகேயன், அதை குறைக்க நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், 5, 12, 18, 28 விழுக்காடு என இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்புகளை இரண்டு வகைகளாகக் குறைக்க வேண்டும் என்றார்.

கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் (ETV Bharat Tamil Nadu)

வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியதும், இரண்டு வகைகளாக ஜி.எஸ்.டி முறைப்படுத்தப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்திருந்ததைக் குறிப்பிட்டு பேசிய அவர், தற்போது அந்த வரம்பை தாண்டி வரி வசூல் இருப்பதால், உடனடியாக இதை நடைமுறைபடுத்த அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்கிறார் கார்த்திகேயன்.

ஒரு கோடிக்கு ரூ.18 லட்சம்

தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக 5,000 சதுர அடியில் ஒரு நிறுவனத்தை தொடங்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும். இதற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே, கடன்களைப் பெற்று தொழில் தொடங்குகிறோம். ஆனால், இப்போது வரி செலுத்துவதற்காகக் கூடுதல் கடன் பெற வேண்டிய சூழல் எழுந்துள்ளது. எனவே, இந்த வரியைக் குறைக்க வேண்டும்,” என்று தனது இன்னல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சிறு தொழிற்கூடத்தில் வேலை செய்யும் தொழிலாளர் (ETV Bharat Tamil Nadu)

ஆனால், தங்களின் இன்னல்களை போக்க சிறு குறு தொழில் சார்ந்த தொழில்முனைவோர்கள் வங்கிகளில் வாங்கும் கடன்களுக்கு 5 விழுக்காடு வட்டி செலுத்தினால் போதும் என நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறு தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜேம்ஸ் கூறினார்.

இதையும் படிங்க:'தனியார் கல்லூரிகளில் இலவச கல்வி': மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இருக்கும் எதிர்பார்ப்பு!

மேலும், தொழில்துறை ஈட்டி தரும் ஜிடிபி-யில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) இருந்து குறைந்தது ஒரு விழுக்காடு நிதியை, சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்காக ஒதுக்க வேண்டும்; வரி வரம்பின் கீழ் சிறு வேலைகளை செய்து கொடுக்கும் தொழில் முனைவோர்களுக்கு வரி விதிப்பை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

கொள்முதல் மானியம்

நிதிநிலை அறிக்கை 2025-ல், சிறு தொழில்களுக்காக கொள்முதல் செய்யப்படும் இயந்திரங்களுக்கு 25 விழுக்காடு மானியம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஜேம்ஸ், சிறு குறு தொழில்கள் நடக்கும் இடங்களை கண்டறிந்து, குறுந்தொழிற்பேட்டைகளை உருவாக்க நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறு தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜேம்ஸ் (ETV Bharat Tamil Nadu)

மேலும், வாங்கும் கடனை செலுத்தத் தவறும் தொழில்முனைவோர்களுக்கு 90 நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இதனை 120 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் ஜேம்ஸ் நமக்களித்தப் பேட்டியில் கூறினார்

வரி உச்ச வரம்பு

நிதிநிலை அறிக்கை 2025 குறித்து பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் லுந்த், “ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் நேரடி வரிக் குறியீடு (Direct Tax Code) தொடர்பான அறிவிப்பு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வருமான வரிச்சட்டத்தில் உள்ள விதிகளை எளிமையாக்கி, பொருத்தமற்ற பிரிவுகளை நீக்குவதன் மூலம் சட்டச் சிக்கல்கள் குறைக்கலாம். இது வரி செலுத்தும் முறையை எளிதாக்கும். மேலும், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.20 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.

எளிதாக தொழில்கள் செய்யும் வகையிலான திட்டங்களை அறிவிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். அதேபோல கோவைக்கு மத்திய அரசின் சில திட்டங்களை கொண்டு வர வேண்டும். ரயில்வே துறையில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,” என்று கூறினார்.

தொழில்துறையினர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கை 2025-ல், சிறு குறு நிறுவனங்களுக்கு அளிக்கபடும் கடன்களுக்கு குறைந்த வட்டி, ஜிஎஸ்டி-யை இரண்டு அடுக்கு வகையில் நடைமுறைபடுத்த வேண்டும், இயந்திர கொள்முதலுக்கு 25 விழுக்காடு மானியம் வேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் ஒரு விழுக்காடு நிதியை சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தவும் என்பன போன்ற பல கோரிக்கைகளுடன் தொழில்முனைவோர் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details