தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மத்திய பட்ஜெட் 2025: துறைவாரியாக நிதி ஒதுக்கீடும், முக்கிய அம்சங்களும் - முழு விவரம்! - UNION BUDGET 2025 HIGHLIGHTS

பட்ஜெட் 2025: நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள், எந்த துறைக்கு அதிக முதலீடு என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

நிதிநிலை அறிக்கை 2025 முழு விவரம் - கோப்புப் படம்
நிதிநிலை அறிக்கை 2025 முழு விவரம் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 5:39 PM IST

டெல்லி:நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்பு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில் இன்று 2025 - 26 நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2025 - 26) தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக நிதியமைச்சர் தாக்கல் செய்யும் 8-ஆவது நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி உச்ச வரம்பு, சிறு குறு தொழில் கடன்களுக்கு குறைந்த வட்டி, விலைவாசி உயர்வு போன்றவைகள் கருத்தில் கொள்ள வேண்டும் எனும் கோரிக்கைகளோடு பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.

இதில் முக்கியமாக வருமான வரி சலுகையின் உச்ச வரம்பு ரூ.12 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டது, அணுசக்தி மின்சார உற்பத்திக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது போன்றவை உடன், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த 5 லட்சம் பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன்கள், 10 ஆயிரம் மருத்துவப் படிப்புக்கான இடங்கள், விவசாயிகள் அட்டை வைத்து ரூ.5 லட்சம் வரை கடன் போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

முதலில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி நிலையைப் பார்க்கலாம்.

பாதுகாப்பு ரூ.4,91,732 கோடி
ஊரக வளர்ச்சி ரூ.2,66,817 கோடி
உள்துறை ரூ.2,33,211 கோடி
விவசாயம் ரூ.1,71,437 கோடி
கல்வி ரூ.1,28,650 கோடி
சுகாதாரம் ரூ.98,311 கோடி
நகர்ப்புற வளர்ச்சி ரூ.96,777 கோடி
தகவல் தொழில்நுட்பம் ரூ.95,298 கோடி
ஆற்றல் ரூ.81,174 கோடி
வர்த்தகம் மற்றும் தொழில் ரூ.65,553 கோடி
சமூக நலன் ரூ.60,052 கோடி
அறிவியல் ஆய்வுகள் ரூ.55,679 கோடி

எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக புதிய பட்ஜெட் இருக்கும் என தொடங்கிய நிர்மலா சீதாராமன், உரையின் இடையே

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி"

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார். தொடர்ந்து வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகளை முதலில் வாசித்தார்.

வேளாண்மை

நாடு முழுவதும் 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், விவசாயிகள் அட்டைகள் மூலம் பெறுவதற்கான கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயரும் என்றும் அறிவித்துள்ளார். இந்த துறைக்கு ஒரு கோடியே 71 லட்சத்து 437 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • வேளாண்மையை ஊக்குவிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • முதற்கட்டமாக நாடு முழுவதும் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
  • மக்கள் இடம்பெயர்வதை தடுக்க கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முதன்மையான நோக்கமாக இருக்கும்
  • துவரம் பருப்பு மற்றும் மைசூர் பருப்பு போன்றவைகளின் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
  • பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டுகள் இலக்கு.
  • பாசன மேம்பாடு மற்றும் விளை பொருள்களுக்கான சேமிப்பு கிடங்கு வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • நாடு முழுவதும் 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலை அதிகரிக்கவும் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • சிறப்பான சாகுபடிக்கு தேவையான விதைகளை நாடு முழுவதும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விவசாயிகள் அட்டைகள் மூலம் பெறுவதற்கான கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

வரி

புதிய வருமான வரி நடைமுறையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி, 2025-26 நிதியாண்டில் மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுபவர் வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் நிலைக்கழிவாக ரூ75,000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இதனால் புதிய வருமான வரி நடைமுறையில் கணக்கைத் தாக்கல் செய்வோர் ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை.

  • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக அதிகரிப்பு.
  • உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
  • முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
  • பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்.
  • சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ. 30,000 ஆக அதிகரிப்பு.

முதலீடுகள்

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட முதலீடுகள் பொருத்தவரை, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பிராண்டபேண்ட் வசதி, செயற்கை நுண்ணறிவில் சிறப்பு மையம், அடுத்த 5 ஆண்டுகளில் 75000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார்.

இதையும் படிங்க:பட்ஜெட் 2025: விலை குறையும் மின்சார வாகனங்கள்
  • 8 கோடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பிராண்டபேண்ட் வசதி
  • மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க நடவடிக்கை
  • இளைஞர்களுக்கான தேசிய சிறப்பு மையங்கள் 5 இடங்களில் தொடங்கப்படும்
  • ஐஐடி-களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 65,000-லிருந்து 1.35 லட்சமாக அதிகரிக்கப்படும்
  • செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்பு மையம் அமைக்கப்படும்
  • அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்படும்; நடப்பு நிதியாண்டில் 10,000 இடங்கள் உருவாக்கப்படும்
  • அனைத்து சுகாதார மையங்களிலும் பிராண்ட் பேண்ட் வசதி செய்து தரப்படும்
  • அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேரப் பராமரிப்பு புற்றுநோய் மையம் அமைக்கப்படும்
  • ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு
  • அடுத்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைக்கப்படும்
  • நகர்ப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய திட்டம்
  • மின்சார தேவையை சமாளிக்க 2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி அவசியம்
  • அணுசக்தி மின்சார தயாரிப்பு திட்டங்களுக்காக ரூ.20,000 கோடி
  • ரூ.25,000 கோடியில் கடல்சார் மேம்பாட்டு நிதி - இதில் 49 விழுக்காடு ஒன்றிய அரசு, 51 விழுக்காடு கப்பல் நிறுவனங்களும் வழங்கும்
  • பீகாரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும்
  • 4 கோடி கூடுதல் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம் தொடங்கப்படும்
  • மாநில அரசுகளுடன் இணைந்து புதிதாக 50 சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்
  • மருத்துவ சுற்றுலாவுக்கு உதவும் வகையில் விசா விதிகள் எளிமைப்படுத்தப்படும்
  • தனியார் துறையின் உதவியுடன் மருத்துவ சுற்றுலா ஊக்குவிக்கப்படும்
  • பிரதமரின் கதி சக்தி (PM Gati Shakthi) திட்டத்தின் கீழ் நிலத் தரவுகளை புதிய தலைமுறைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் முறைக்கு மாற்ற நேஷனல் ஜியோ-ஸ்பேசியல் திட்டம் (National Geospatial Mission) அறிமுகம்

கல்வி

ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 "அடல் டிங்கரிங் ஆய்வகங்கள்" அமைக்கப்படும். இதன் மூலம் இளம் மனங்களிடையே ஆர்வம் மற்றும் புதுமை உணர்வை வளர்க்கவும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் முடியும்.

இதையும் படிங்க:பட்ஜெட் 2025: அறிவியல் சிந்தனையை வளர்க்க 50,000 ஆய்வகங்கள்! கல்வித்துறையில் அதிரடி அறிவிப்பு!

மருத்துவம்

மருந்துகளுக்கான சுங்க வரிகள் குறித்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படும் எனவும், உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரியை முற்றிலுமாக ரத்து செய்து, மேலும் ஆறு வகை மருந்துகளுக்கு 5 விழுக்காடு வரியில் சலுகை அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் அறிவித்தார். தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details