சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏற்றம் காணும் தங்கத்தின் விலை, அவ்வப்போது சிறிதளவில் குறைந்து வருகிறது. தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், இந்திய மக்களின் சேமிப்பின் முக்கிய பொருளாகவும் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட தங்கம், தற்போதைய விலை ஏற்றத்தால் சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான உயர்வை கண்டுள்ள தங்கத்தின் விலையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுவாக தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, உலக நாடுகளிடையே உருவாகி வரும் போரின் எதிரொலி மற்றும் பொருளாதார மந்தம் காரணாமாகவும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்றம் கண்டு வந்தது.
நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், இன்று அதன் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. அதாவது, சென்னையில் வெள்ளிக்கிழமை (நேற்று) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.55 ஆயிரத்தில் இருந்து சரிந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.