தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடி முதலீடு! முகேஷ் அம்பானி அறிவிப்பு! - RELIANCE INDUSTRIES

மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்படும் என ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியுடன் முகேஷ் அம்பானி
மம்தா பானர்ஜியுடன் முகேஷ் அம்பானி (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2025, 2:20 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் 8-வது மேற்கு வங்க உலகளாவிய வணிக உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வதாக அறிவித்தன. அதில் மிக முக்கியமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகும். வரும் 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய விரும்புவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

இந்த நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, "2016-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் குழுமம் ரூ.2000 கோடி முதலீடு செய்தது. இது தற்போது ரூ.50,000 கோடியாக உயர்த்தப்படவுள்ளது. இந்த புதிய முதலீடு பசுமை எரிசக்தி மற்றும் சில்லறை வர்த்தகம் உட்பட பல துறைகளில் பரவி, மாநிலத்தில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முன்னணியில் இருப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாராட்டிய அவர், "மேற்கு வங்கத்தின் சொத்து அதன் மக்களும் அவர்களின் திறமைகளும் தான்" என்று கூறினார். மேலும் ரிலையன்ஸ் எப்போதும் மேற்கு வங்கத்தின் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்றும் கூறினார். "மேற்கு வங்கத்தின் அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய உண்மையான கூட்டாண்மையை உருவாக்குவதே இந்த முதலீடு. மேற்கு வங்கம் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. மேலும் 90 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது" என்று அம்பானி கூறினார்.

இது தவிர, உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட JSW குழுமம், சல்போனி என்னும் இடத்தில் 1,600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை அமைக்க ரூ.16,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இது போன்ற முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் அதன் திறனை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக JSW குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்தார்.

"கொல்கத்தா தலைமையிலான கிழக்கு இந்தியா இந்தியாவின் எதிர்காலம் என்று நான் நம்புகிறேன். மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் இருமுறை யோசிக்க வேண்டியதில்லை" என்றும் சஜ்ஜன் ஜிண்டால் கூறினார். ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கு சல்போனியில் ஒரு சிமெண்ட் ஆலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமமும் மேற்கு வங்கத்தில் ரூ.10,000 கோடி மதிப்பிலான முதலீட்டை அறிவித்தது. குழுவின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், இந்த முதலீடு சுகாதாரம், எரிசக்தி மற்றும் கல்வித் துறைகளில் இருக்கும் என்று கூறினார். மேலும் அவரும் மம்தா பானர்ஜியை பாராட்டினார். முதலமைச்சர் எப்போதும் அணுகக்கூடியவர் என்றும் விரைவான மற்றும் வெளிப்படையான முடிவுகளை எடுப்பார் என்றும் கூறினார்.

முன்னதாக, உச்சி மாநாட்டில் தனது உரையில், மேற்கு வங்கத்தில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய மாநில அளவிலான குழுவை அமைப்பதாக அறிவித்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் 6 பொருளாதார வழித்தடங்கள் கட்டுவது உட்பட மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தற்போதைய உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் மம்தா பானர்ஜி எடுத்துரைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details