பெங்களூரு:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் கோரி பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் அளித்ததாக வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி போலீசாருக்கு தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிஐடி போலீசாரின் முன் ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, "முன் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்தேன். ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகப் போவதாக எழுத்துப்பூர்வமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். உயர் நீதிமன்றம் சிஐடிக்கு கைது செய்வதில் இருந்து தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
திங்கட்கிழமை (ஜூன்.17) விசாரணையில் தேவையில்லாமல் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை, உண்மை அனைவருக்கும் தெரியும். சதியில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரில் சதாசிவ நகர் போலீசார் எடியூரப்பா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே இந்த வழக்கு விசாரணை சிஐடிக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடி போலீசார், எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை. தொடர்ந்து இரண்டு முறை சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியும் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராக எடியூரப்பா அவகாசம் கோரி இருந்தார். இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க உத்தரவிடக் கோரி பெங்களூருவில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க:பிஎம் கிஷான் திட்டத்தின் 17வது தவணை: ஜூன் 18ல் பிரதமர் மோடி வெளியீடு! - Pm Kishan Scheme 17th installment