நியூ யார்க்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (ஜூன்.12) நியூ யார்க்கில் உள்ள நாசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு உலக கோப்பை சீசனில் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் குருப் பிரிவில் முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. இதில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி முதல் இடத்தையும் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும். மோனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்கா அணியை பொறுத்தவரை, கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா முத்திரை பதித்தது.
அதற்கு முன்னதாக கனடா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அமெரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணியை பொறுத்தவரை அயர்லாந்து மற்றும் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.