ஹைதராபாத்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த தேர்தலில், ஜம்மு - காஷ்மீரில் 87 பேரவைத் தொகுதிகள் இருந்தன. இப்போது அது 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 90 தொகுதிகளில் 47 காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகவும், 43 ஜம்மு பிராந்தியத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளன.
10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்தலில் மொத்தம் 63.88 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இங்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பேரவைத் தேர்தலில் 65.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இம்மாநிலத்தில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், ஆனால் அந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரிவித்தன.
இதையும் படிங்க:ஹரியானாவில் பாஜகவுக்கு கடும் சவாலாக உள்ள தொகுதிகள்.. கடைசி நேரத்தில் முடிவுகள் மாற வாய்ப்பு!
ஆனால் அதற்கு மாறாக இங்கு காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் படி, தேசிய மாநாட்டு கட்சி 39 தொகுதிகளில் வெற்றியும், 3 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது. காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 27 தொகுதிகளில் வெற்றியும், 2 தொகுதிகள் முன்னிலையிலும் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி 1 தொகுதியிலும், ஆம் ஆத்மி 1 தொகுதியிலும், சுயேட்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கிட்டத்தட்ட எட்டியுள்ள நிலையில், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட முடிவு பாஜகவுக்கு இத்தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2014 தேர்தலில் இம்மாநிலத்தில் பாஜக 25 தொகுதிகளில் (22.98 வாக்கு சதவீதம்) வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் மாலை 4 மணி பாஜக 29 தொகுதிகளில் (25.63 வாக்கு சதவீதம்) முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை பாஜக பெறாவிட்டாலும், முந்தைய தேர்தலைக் காட்டிலும் அக்கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளதும், வாக்கு சதவீதமும் அதிகரித்திருப்பதும் பாஜக மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதாக உள்ளதாக பேசப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்