புதுடெல்லி:மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்ததாக கூறி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா (Image credits-Sansad TV) அம்பேத்கர் பெயருக்கு காங்கிரஸ் சொந்தம் கொண்டாடினால் அது குறித்து பாஜகவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அம்பேத்கர் மீதான உண்மையான உணர்வுகளை அவர்கள் (காங்கிரஸ்) பேச வேண்டும். அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 உட்பட பல விஷயங்களில் அதிருப்தி அடைந்ததால் நாட்டின் முதலாவது அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ராஜினாமா செய்தார்,"என்றார்.
இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, "அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அவமதித்தன் மூலம், பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவை மூவர்ண தேசியக் கொடிக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. அவர்களின் முன்னோர்கள் அசோக சர்க்கரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா விடுதலை பெற்ற முதல் நாளில் இருந்தே இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்குப் பதில் சங்க் பரிவார் அமைப்புகள் மனுஸ்மிருதியை அமல்படுத்த வேண்டும் என்று விரும்பினர்.
ஆனால், அம்பேத்கர் அவர்களின் ஆசைக்கு இணங்கவில்லை. அதனால்தான் அவருக்கு எதிராக அதிக வெறுப்பை தெரிவிக்கின்றனர். என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்கள் அம்பேத்கரை கடவுளுக்கு இணையாக கருதுகின்றனர் என்பதை பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் எப்போதுமே தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பின் தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், ஏழைகளை காக்கக்கூடியவராக இருக்கிறார்," என கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் அமளி:இதனிடையே, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் இன்று வழங்கம்போல் கூடின. மாநிலங்களவையில் இன்று கூடியதும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர். இதையடுத்து ஜீரோ ஹவர் தொடங்கும் நேரத்தில் இருக்கையில் இருந்து எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ஜெயராம் ரமேஷ், "உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்து விட்டார்," என்றார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் இருக்கைகளில் இருந்து எழுந்து, அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று கோஷமிட்டனர். காங்கிரஸ் எம்பிக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அம்பேத்கருக்கு பாரத் ரத்னா கொடுத்து கவுரவிக்காமல், காங்கிரஸ் கட்சிதான் அவரை அவமதித்துள்ளது,"என்றார்.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே அம்பேத்கர் போஸ்டரை காட்டியபடி பேச முயற்சித்தார். அப்போது மாநிலங்களவையை உணவு இடைவேளை வரை ஒத்தி வைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
மக்களவையிலும் அமளி:மக்களவை அலுவலல்கள் இன்று தொடங்கியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அம்பேத்கரின் போஸ்டர்களை காட்டியபடி, உள்துறை அமித்ஷா மனிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் கட்சிதான் எப்போதுமே அம்பேத்கரை அவமதித்து வருகிறது. இதன் காரணமாகத்தான் மக்களவை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.அவரை ஒருபோதும் மதிக்காத காங்கிரஸ் கட்சி இப்போது அவரது வலுக்கட்டாயமாக அவரது பெயருக்கு சொந்தம் கொண்டாடுகிறது என்றார்.
அப்போது மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, அவையின் கேள்வி நேரத்தை தொடர அனுமதிக்கும்படி உறுப்பினர்களை வலியுறுத்தினார். ஆனால், உறுப்பினர்கள் அதனை செவிமடுப்பதாக இல்லை. எனவே வேறு வழியின்றி உணவு இடைவேளை வரை மக்களவையின் அலுவல்களை ஒம்பிர்லா ஒத்தி வைத்தார். முன்னதாக , அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துகள் தொடர்பாக மக்களவையின் பிற அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் மாணிக் தாக்கூர் நோட்டீஸ் அளித்திருந்தார்.