கோழிக்கோடு:நாடெங்கும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கேரளா நாடாளுமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கும் (LDF), ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டம் வடகரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஷாபி பரம்பில் என்பவர் கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த கேரளா மக்களை நேற்று சந்தித்து வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவிற்கு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாருக்கு புலம்பெயர்ந்து சென்ற கேரளாவைச் சேர்ந்த வாக்காளர்களை இதற்காக அவர், சந்தித்து பேசினார். அப்போது பயணிகளை மிரட்டி அதிக விமான கட்டணம் வசூலிப்பது, உயிரிழந்தவர்களின் உடல்களை வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டுவருவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பது போன்றவைகள் குறித்து பேசி பரப்புரை மேற்கொண்டார். மேலும் அவர், வெளிநாட்டில் உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்படும் விவகாரத்தில் தீர்வு காண்பேன் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.