அமராவதி: ஆந்திராவில் நேற்றைய முன்தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் புகழ்பெற்ற புனிதமிக்க திருமலை திருப்பதி கோயில் லட்டுகள் தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டவை என தெரிவித்தார்.
குறிப்பாக, நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டை வைத்த சந்திரபாபு நாய்டு, ஆனால், தற்போது லட்டு செய்வதற்கு சுத்தமான நெய் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக, தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் சில இந்து அமைப்புகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேநேரம், சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சு, அவரது அரசியல் எந்த அளவு கீழ் செல்லும் என்ற நிலையைக் காட்டுவதாகவும், இதனால் திருமலை திருப்பதி கோயிலின் புனிதம் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவருமான ஒய்வி சுப்பா ரெட்டி தெரிவித்தார்.