ஐதராபாத்: சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக ஆந்திர பிரதேச சட்டமன்றம் இன்று (ஜூன்.21) கூடியது. இதில் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினருமான நந்தமுரி பாலகிருஷ்ணா எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக பாலகிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முதல் முறையாக எம்எல்ஏவான ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் சட்டப்பேரவையில் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களை கைபற்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.