சென்னை:கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த திங்கள்கிழமை (ஜுலை 29) நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் பலரது இயல்பு வாழ்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது எனக் கூறலாம். இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரின் துயரத்தையும், அவர்களின் உளவியல் அதிர்ச்சியையும் கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை குழு ஒன்று அமைத்துள்ளது.
இதில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், பேரிடரில் மறைந்த நபர்களைப் பற்றியும், மறக்க முடியாத நினைவுகள் பற்றியும் நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள் கூறும் பேரிடரின் திக்திக் நிமிடங்கள் குறித்து காணலாம்.
இந்நிகழ்வானது எனது வாழ்க்கையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தனது வேதனையான தருணங்கள் குறித்து கூறத் தொடங்கினார் சாஹிர். “நான் முண்டக்கை சூரல் மேல்நிலைப் பள்ளி சாலையில் வசித்து வந்தேன். அன்று இரவு எப்போதும் போல் நல்ல இரவாக அமையவில்லை. நான் எனது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென அதிகாலை 1.30 மணிக்கு காதை பிளக்கும் சத்தம், முதலில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டது.
எனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடினர். நான் அவசரமாக எனது அம்மாவிற்கும், மற்ற உறவினர்களுக்கும் அலைபேசியில் அழைத்தேன், யாரும் எடுக்கவில்லை. சிறுது நேரத்தில் அலைபேசிக்கு அழைப்பு போகவில்லை. அதேநேரம், மறுபுறம் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டு, சேற்று நீர் வீடு என அனைத்தையும் அடித்துச் சென்றது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட நான், எனது மனைவி, குழந்தைகளுடன் இருட்டில் அருகிலுள்ள மலையில் ஏறினோம். அது சுமார் 15 மீட்டர் தொலைவில் இருந்தது. நாங்கள் ஏறும்போது மூன்றாவது நிலச்சரிவு ஏற்பட்டது. அதுதான் மிகக் கொடூரமாக உயிர்களைப் பறித்தது. மரண ஓலம் காதை துளைத்தது, சுற்றிப் பார்த்தேன் என்னால் முடிந்தவரை சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சித்தேன்.
ஆனால், பாறைகளுக்கு அடியில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டது. எனது கண் முன்னாள் அவர்கள் துடிதுடித்தும் என்னால் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை. நான் அவர்களை பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த சில மணி நேரத்தில் எனது தாய், சகோதரி, சகோதரரின் மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என அனைவரையும் இழந்தேன்.
இந்த நிலச்சரிவு எனது 16 உறவினர்களின் உயிரை பறித்துவிட்டது. அதில் ஏழு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால், ஒன்பது பேர் இன்னும் காணவில்லை. அவர்கள் எப்படியாவது இந்த துஷ்ட நிலச்சரிவிடம் இருந்து தப்பி என்னிடம் திரும்புவார்கள் என பிராத்தனை செய்து காத்துக் கொண்டிருகிறேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், கடும் சோகத்தோடு அந்த மலையில் ஏறி தற்காத்துக் கொண்ட சிறிது நேரத்திற்குப் பின், முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் வெள்ளர்மலை பள்ளி அடித்துச் செல்லப்பட்ட தகவல் தெரிய வந்தது. இங்கு படித்த 32 குழந்தைகளில்,20 பேர் இறந்து கிடந்தனர், 12 பேர் இன்னும் காணவில்லை. ஆனால், மீட்புப் பணிக்கு யாரும் உயிருடன் இல்லை என ராணுவம் அறிவித்ததையடுத்து, நெஞ்சையடைக்கும் சோகம் ஏற்பட்டது.
இதில் 32 மாணவர்களின் பட்டியலை ஆசிரியர்கள் தயாரித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலங்களில் 14 சிறுவர்களும், 6 சிறுமிகளும் அடங்குவர். காணாமல் போன 12 மாணவர்கள், அவர்களில் ஏழு பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் அந்த காணாமல் போன மாணவர்கள் ஏதாவது அதிசயம் நடந்து மீண்டும் வந்துவிட வேண்டும் என அவர்களது தோழர்கள், ஆசிரியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதேபோல் நிலச்சரிவு குறித்து கார்த்யாயனி கூறியபோது, “கடும் மழை காரணமாக எனது குடும்பத்தினர், எங்கள் மூத்த மகள் வீட்டிற்குச் சென்றனர். நானும் சரியாக அன்று இரவுதான் வீட்டிலிருந்து வெளியேறி அங்கு சென்றேன். நள்ளிரவில் கிடைத்த தகவல்படி எனது அக்கம்பக்கத்தினருக்கு போன் செய்தேன், அவர்கள் எடுக்கவில்லை. இந்நிலையில், அன்று இரவு நடந்த பேரழிவால் தற்போது எனது வீடும் இல்லை, அக்கம்பக்கத்தினரும் இல்லை. நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது அவர்கள் கொண்டு சென்ற பொருட்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், “சுகாதாரத்துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே முகாம்களிலும், வீடுகளிலும், மனநலச் செயல்பாட்டுக் கூடங்களிலும் அனுமதிக்கப்படுகிறார்கள். மனநல மருத்துவரின் தலைமையில், மருத்துவ உளவியலாளர்கள், மனநல சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 121 சான்றளிக்கப்பட்ட மனநலப் பணியாளர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்பட்டு, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மனநலச் சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இதனுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் குழுக்கள் சிறப்பு கவனம் செலுத்துகின்றன. இந்தக் குழுவில் சுகாதாரப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மற்றும் பிற மீட்புப் பணியாளர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:வயநாடு நிலச்சரிவில் பாட்டி - பேத்தியைக் காப்பாற்றிய யானை.. கோவை கலைஞர் நெகிழ்ச்சி வடிவமைப்பு!