டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை வரை உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பையொட்டி நடந்த இந்த கைது சம்பவம் நாடளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தன் மீதான குற்றசாட்டுகளை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் கெஜ்ரிவால் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது அதனை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் கடுமையான வாதம் வைக்கப்பட்டது. '' தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ கிடையாது. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருப்பதால் அவருக்கு விதிவிலக்கு கொடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அரசியல்வாதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கிறதா என்றும் அமலாக்கத்துறை தரப்பில் காட்டமாக வாதம் வைக்கப்பட்டன.