புதுதில்லி: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரண்டு சிபிஐ அதிகாரிகள், ஆந்திர மாநில காவல் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதகாரி ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறுவார்கள்; சிபிஐ இயக்குநர் தலைமையில் இக்குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும் உச்ச நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
'திருப்பதி லட்டு தயாரிப்பில் விலக்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்த விசாரணை நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, நீதிபதிகள் பி.ஆர்.காவை, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "நீதிமன்றம் அரசியல் ஆடுகளமாக பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தை அரசியல் நாடகமாக மாற்ற விரும்பவில்லை" என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.