கிருஷ்ணா: ஆந்திர பிரதேச மாநிலம் சீதனப்பள்ளி பகுதியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். கிரிதிவேனு நோக்கி மீனவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்த நிலையில், எதிர்திசையில் வந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் மீனவர்கள் சென்ற வேன் முற்றிலும் சேதமாகி உருக்குலைந்தது. மேலும் வேனில் பயணித்த 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது மேலும் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் நிலவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்து எப்படி நிகழ்ந்தது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதா அல்லது வேறெதும் காரணமா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இரண்டு வாகனங்களுக்கு இடையே மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டரும் சிக்கிக் கொண்டது. இதனால் சம்பவ இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் ஏறத்தாழ 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையும் படிங்க:குவைத் தீ விபத்து: 45 இந்தியர்களின் சடலங்கள் கொச்சி வருகை! - Kuwait building fire