புதுடெல்லி:அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது தங்கியிருந்த பங்களா ஒரு கண்ணாடி மாளிகையாக தங்கத்திலான டாய்லெட் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளை கொண்டிருந்தது என்ற சர்ச்சை இப்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பேசு பொருளாகி உள்ளது.
ரூ.45 கோடியில் கண்ணாடி மாளிகை:ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது தங்கியிருந்த வீட்டை கண்ணாடி மாளிகை போல புதுப்பிக்க ரூ.45 கோடிக்கும் மேல் செலவிட்டதாக கடந்த 2023ஆம் ஆண்டு பாஜக குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் தணிக்கை செய்ய வேண்டும் என புதுடெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
ஆம் ஆத்மி தரப்பில், இந்த கட்டடம் கடந்த 1970ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், மிகவும் பழமை வாய்ந்ததாக ஆனதால், அரசின் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை பாஜக விடுவதாக தெரியவில்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய கெஜ்ரிவால், உடனடியாக கண்ணாடி மாளிகை இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று பாஜக கேட்டது. அதன்படி கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறினார்.
அமித்ஷா குற்றச்சாட்டு: இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான பாஜகவினர், பங்களாவை புதுப்பிக்க மக்கள் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் புதுடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு கடந்த 4ஆம் தேதி புதிய திட்டங்களைதொடங்கி வைத்து உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி மக்களின் 45 கோடி ரூபாய் வரிப்பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணாடி மாளிகை கட்டியிருப்பதாக குற்றம் சாட்டினார். டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டியதாக கூறப்படும் கண்ணாடி மாளிகை மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினரும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை விடுவிக்க உத்தரவு!
கெஜ்ரிவாலின் வீட்டில் ஆடம்பரமான கட்டமைப்புகள் இல்லை என்று கூறி டெல்லி ஊடகங்களின் செய்தியாளர்களை முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்ஆத்மியை சேர்ந்த சௌரப் பரத்வாஜ், சஞ்சய் சிங் ஆகியோர் அழைத்துச் சென்றனர். இப்போது அந்த வீட்டில் இப்போதைய முதலமைச்சர் அதிஷி தங்கி உள்ளார். இந்த நிலையில் ஊடகங்களின் செய்தியாளர்களை அழைத்துச் சென்ற சௌரப் பரத்வாஜ், சஞ்சய் சிங் இருவரையும் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். டெல்லி முதலமைச்சரின் வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாதவாறு தடுப்புகளையும் போலீசார் அமைத்திருந்தனர்.
பிரதமரின் இல்லம்:முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சௌரப் பரத்வாஜ்,"வாக்குறுதி அளித்தபடி நாங்கள் ஊடகங்களை முதலமைச்சர் இல்லம் அமைந்துள்ள எண்.6 பிளாக்ஸ்டாப் சாலைக்கு காலை 11 மணிக்கு அழைத்துச் செல்கின்றோம். பாஜகவினர் கூறியபடி அங்கு நீச்சல் குளம், மினி பார், தங்கத்திலான டாய்லெட் ஆகியவை இருக்கிறதா என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல பிரதமர் இல்லம் அமைந்திருக்கும் பகுதிக்கும் செய்தியாளர்களை அழைத்து செல்வோம். பிரதமரின் இல்லம் பெரிய ராஜ் மஹால் ஆக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2700 கோடி செலவிடப்பட்டுள்ளது,"என கூறினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி பாஜக மாநிலத் தலைவர் வீரேந்திரா சஜ்தேவா, "கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பங்களாவை விட்டு வெளியேறிய உடன் அங்கு தங்கத்திலான டாய்லெட் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்கள் அகற்றப்பட்டு விட்டன,"என்று கூறியுள்ளார்.