பிஜாப்பூர்:சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே அமைந்துள்ள காட்டில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பல மணிநேரம் நீடித்த இந்தச் சண்டையில், நக்சலைட்டுகள் 31 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் இருவர் வீர மரணம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவலாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.