ராஞ்சி (ஜார்கண்ட்):நிலக்கரி சுரங்க முறைகேடு, பணமோசடி குற்றச்சாட்டில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகப் பல முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் 8வது முறை சம்மன் அனுப்பப்பட்டு, கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஹேமந்த் சோரன் இல்லத்தில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஜனவரி 29 முதல் 31 ஆம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் அவருக்குச் சம்மன் அனுப்பினர். ஆனால் அந்த சம்மனுக்கும் ஹேமந்த் சோரன் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளதாகவும், அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியானது.
இதனையடுத்து 29ஆம் தேதி டெல்லி விரைந்த அமலாக்கத்துறையினர் ஹேமந்த் சோரன் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அவரது ஓட்டுநரும் ஹேமந்த் சோரன் எங்கு உள்ளார் என தெரியாது என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஹேமந்த் சோரனை பல இடங்களிலும் அமலாக்கத்துறையினர் தேடியுள்ளனர். காலை 9 மணிக்கு அங்கு சென்ற அமலாக்கத்துறையினர் இரவு 10.30 மணி வரை ஹேமந்த் சோரனுக்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அமலாக்கத்துறையினர் அங்கிருந்த ஹரியான பதிவு எண் கொண்ட ஒரு பிஎம்டபிள்யூ காரையும், சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை விசாரணைக்குப் பயந்து ஹேமந்த் ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டார் என பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் என்ற முறையில் கவனித்து வருவதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்வார் என ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் முதலமைச்சர் அமலாக்கத்துறை விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகி உள்ளார். அவரது மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்க உள்ளார். இதற்காக அவர் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து வருகிறார் என X சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.