டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக வெள்ளிக்கிழமை இறுதி முடிவை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறை துணை இயக்குநர் பானு பிரியா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தேர்தல் பிரசாரம் செய்வதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ, சட்டப்பூர்வ உரிமையோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அரசியல் தலைவருக்கும் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது இல்லை என்றும் ஒருவேளை அவர் வேட்பாளராக போட்டியிடாத பட்சத்தில் கூட அனுமதி வழங்கப்பட்டது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக காவலில் இருக்கும் போதும், தனது சொந்த பிரசாரத்திற்காக கூட இதுவரை எந்த வேட்பாளருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது இல்லை என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் ஒருவர் இருக்கும் பட்சத்தில் அவர் வாக்களிக்க அனுமதிப்பது என்பதை அவரது அரசியலமைப்பு உரிமையாக நீதிமன்ற கருதலாம் என்றும் அதற்கு இந்திய பிரதிநிதித்துவ சட்டம் அனுமதிக்கிறது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் முறையிடப்பட்டது.