வயநாடு (கேரளா):கேரள வயநாடு,தமிழக எல்லையானநீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரை ஒட்டி அமைந்துள்ளது. இது தமிழகத்தின் முதுமலை, கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் கேரளா முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளதால், நீலகிரி மற்றும் வயநாடு பகுதியில் மனித - விலங்கு மோதல் அடிக்கடி ஏற்படுகிறது.
இதன் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி பகுதியில், ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானையால், அஜி (42) என்பவர் மிதித்துக் கொல்லப்பட்டதை அடுத்து, உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், தொடரும் வனவிலங்கு தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதியினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (பிப்.16) குருவா தீவு அருகே வனத்துறையின் சுற்றுலா வழிகாட்டியும், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் அதிகரித்து வரும் வன விலங்களின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.