கேரளா (வயநாடு): நாடு முழுவதும் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில், ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பி-யாக தொடர முடியும் என்ற தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில், ராகுல் காந்தி ராஜினாமா செய்த தொகுதியின் வேட்பாளராக அவரது தங்கை பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. மேலும், பிரியங்கா காந்தியை ஆதரித்து ராகுல் காந்தி சுமார் 5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், சகோதரியுமான பிரியங்கா காந்திக்காக வாக்கு சேகரிக்க, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் நேற்று (நவ.03) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி குறித்துப் பேசப்போவதில்லை என்றும், அவரை பற்றி பேசி சலித்து விட்டது. இந்த கூட்டத்தில் அரசியல் உரையாற்றுவது மற்றும் என் குடும்பத்தாருடன் பேசுவது என இரண்டு விருப்பங்கள் எனக்கு உள்ளது. ஆகவே, நான் என் குடும்பத்தாருடன் பேசுவதைப் போல் உங்களிடம் பேசவே விரும்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.
மேலும், "காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அரசியலமைப்புச் சட்டம் என்பது கோபத்துடனும், வெறுப்புடனோ எழுதப்பட்டவை அல்ல. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள், துன்பப்பட்டவர்கள், சிறைவாசம் அனுபவித்தவர்களால் எழுதப்பட்டது. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை அன்புடனும், பாசத்துடனும் எழுதியுள்ளனர். இது அன்புக்கும், வெறுப்புக்கும் இடையேயான சண்டை.
இதுவரை தனக்காக பிரச்சாரம் செய்த பிரியங்காவுக்கு முதல்முறையாக நான் வாக்கு கேட்கிறேன். பிரியங்கா இரக்க குணம் கொண்டவர். நல்ல திறமையானவர்" என அவர்களது குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட பெண்ணை (நளினி) நேரில் சென்று சந்தித்துக் கட்டியணைத்துக் கொண்டவர் என் சகோதரி (பிரியங்கா காந்தி). அவரை சந்தித்த பிறகு, என்னிடம் வந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அப்போது, நளினிக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறினார். நானும் அதற்கு ஆறுதல் தெரிவித்தேன்" என்று கூறினார்.
மேலும், "மோடி அரசு அவரது பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. அவருடைய நோக்கம், உங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையைத் தருவது அல்ல; படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது இல்லை; சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் மக்களுக்கு நல்வாழ்வு வழங்குவது அல்ல" எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: 68 மில்லியன் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு!