புதுடெல்லி: மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, '' அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது.. அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்'' என்றார்.
ராகுல் காந்தி
அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சூடாக்கியுள்ளது. அமித் ஷாவை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு எதிராக பாஜகவை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, '' அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை ஒழிக்க பாஜக விரும்புகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று ஆரம்பம் முதலே பாஜகவினர் கூறி வந்தனர். இவர்கள் அம்பேத்கர் மற்றும் அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள். அரசியலமைப்பு சட்டத்தையும் அம்பேத்கர் செய்த பணியையும் ஒழிப்பதே அவர்களின் ஒரே வேலையாக உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்'' என்று கூறினார்.
உத்தவ் தாக்கரே ஆவேசம்
அதேபோல, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, '' நாடாளுமன்றத்தில் நேற்று அமித் ஷா பேசிய விதம் அநாகரீகமானது. ''அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது பேஷன் ஆகிவிட்டது என்றும், அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்தில் இருந்திருப்பார்கள் என்றும்'' அநாகரிகமாக கருத்தை பதிவு செய்துள்ளார். இப்படி கூற நீங்கள் (பாஜக) யார்..? அம்பேத்கர் எந்த பக்கமும் கட்டுப்படாத ஓர் ஆளுமை ஆவார். அரசியலமைப்பை நமக்கு அளித்த ஒருவரை அவமதித்துள்ள அமித் ஷா-வுக்கு எதிராக பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நடவடிக்கை எடுப்பார்களா? அமித் ஷாவுக்கு ஆதரவு தெரிவித்த மற்ற கட்சிகள் இதை ஏற்குமா? சந்திரபாபு நாயுடுவோ, நிதிஷ் குமாரோ அல்லது அஜித் பவாரா ஏற்பார்களா?'' என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி ட்வீட்
அமித் ஷாவின் பேச்சு நாடளவில் பெரும் விவாதத்தையும், விமர்சனங்களையும் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இன்று அவரது எக்ஸ் பதிவில், '' காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தாலும், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எதுவும் செய்யவில்லை. டாக்டர் அம்பேத்கரை அவமதித்து, எஸ்சி,எஸ்டி சமூகங்களைப் புறக்கணித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை நாடாளுமன்றத்தில் அமித் ஷா அம்பலப்படுத்தினார். அது அவர்களுக்கே (காங்கிரஸ்) தெரியும். அதனை மறைக்க காங்கிரஸ் என்னவெல்லாம் முயற்சி செய்யலாம். ஆனால், எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான மிக மோசமான படுகொலைகளை அவர்களால் மறுக்க முடியாது'' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.