புதுச்சேரி:கடற்கரை சாலை மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிங்க் நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்புத் துறை கண்டுபிடித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும் மெல்லிய இழையிலான பஞ்சு மிட்டாயை விரும்புவர்.
சர்க்கரையும், நிறமியும் மட்டுமே உள்ள பஞ்சு மிட்டாயில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்ட நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் ரோடமின் பி (RHODAMINE - B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது.
இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். இதை சாப்பிடுவதால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர். குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.