டெல்லி: துர்கா பூஜையை முன்னிட்டு துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தாம் எழுதிய 'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற கர்பா பாடலை பிரதமர் நரேந்திர மோடி இன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
துர்கா பூஜையை முன்னிட்டு குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கர்பா என்ற நடனத்தில் பெண்கள் ஈடுபடுவர். இதற்காக கர்பா பாடலை பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இது நவராத்திரியின் புனிதமான நேரம், மக்கள் அன்னை துர்கா மீதான பக்தியால் ஒன்றுபட்டு வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள்.
இந்தப் பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும், அவரது சக்தி மற்றும் கருணைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நான் எழுதிய ஒரு கர்பா பாடலை இங்கே கேளுங்கள். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும். நவராத்திரியின் இந்த மங்களகரமான திருவிழாவானது துர்காவை வழிபடும் மக்களால் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. அதே நம்பிக்கையுடனும் பக்தியுடனும் நான் 'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற கர்பாவையும் இயற்றியுள்ளேன்.
எல்லையற்ற ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். மா ஜகதம்பா எப்பொழுதும் நம் மீது கருணையோடு இருக்கட்டும். இந்த கர்பா பாடலை இனிமையாகப் பாடிய திறமையான வளர்ந்து வரும் பாடகர் பூர்வ மந்திரிக்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.