புதுடெல்லி:மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மருத்துவனை வளாகத்திலேயே கொடூரமாக கொல்லப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடல் பாகங்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்ததும் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மேற்கு வங்க மாநில அரசை வலியுறுத்தியும் நேற்று (ஆகஸ்ட் 27) தலைமைச் செயலகம் நோக்கி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்றவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சியான பாஜக இன்று மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் (Bangla Banth) நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செய்தியை அறிந்தபோது பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்தேன்.
பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளின் ஒரு பகுதிதான் கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த கொடுமை. இக்கொடூர நிகழ்வை கண்டித்து கொல்கத்தாவில் மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் குடிமக்கள் போராடி கொண்டிருந்தபோது, குற்றவாளிகள் வேறெங்கோ சுற்றித் திரிந்தனர்.
தங்களது பெண் பிள்ளைகள், சகோதரிகள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்கொடுமைகளை நாகரீக சமூகம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற நிகழ்வுகளால் தேசம் சீற்றத்துக்கு ஆளாக நேரிடும். நானும் அப்படிதான்.
வெற்றியை நோக்கிய நம் பெண் பிள்ளைகளின் பாதைகளில் உள்ள தடைகளை தகர்த்தெறிய நாம் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு அடையாளமாய், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை போதும்.. போதும்... என்று அடுத்த ரக்ஷா பந்தன் நாளில் நாம் அனைவரும் ஒன்றாக சொல்வோம்' என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உருக்கமான தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாஜக ஒருபுறம்.. மருத்துவர்கள் மறுபுறம்..போராட்ட களமான மேற்கு வங்கம்!